எதிரொலி

Wednesday, January 9, 2008

புத்தகங்களுக்காக ஒரு பயணம் – சென்னை புத்தகக் கண்காட்சி 2008 !

சென்னையில் 31ஆவது புத்தகக் கண்காட்சி ஜனவரி 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5ஆம் தேதி (சனிக்கிழமை) கண்காட்சிக்குச் செல்லும் பெரும்பேறு பெற்றேன் !

கண்காட்சி அரங்கம் பற்றி:
* இந்த முறை அரங்கிற்குள் செல்ல 6 நுழைவாயில்களை அமைத்திருப்பது அற்புதமான விஷயம். ரூ. 5/- நுழைவுக் கட்டணம். (பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் ரூ. 20/-).

* அரங்கத்திற்குள் எந்த ஒரு வரிசையிலிருந்தும் எந்த ஒரு வரிசைக்கும் எளிதாகச் சென்று வர பாதைகள் அமைக்கப் பெற்றுள்ளன. (கண்காட்சியின் வரைபட அமைப்பு). பாதைகளும் அகலமாக அமைக்கப் பட்டுள்ளன.

* ஒவ்வொரு வரிசையின் ஆரம்பத்திலும் அந்த வரிசையில் இருக்கும் பதிப்பகங்களின் பெயர்களை எழுதி ஒட்டியுள்ளார்கள். இருப்பினும் இந்த அமைப்பு சிறிதாக இருப்பதால் எல்லோராலும் பயன்படுத்த இயலாது என நினைக்கிறேன். குறிப்பிட்ட பதிப்பகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது சற்றே சிரமமாக இருக்கலாம்.

* குடிதண்ணீர் வசதி போதிய இடங்களில் உள்ளது. நான் சென்ற நாளில் தனியே உணவு விடுதி (கேண்டீன்) தயாராகாததால் தற்காலிகமாக நுழைவாயில் அருகில் உணவு வகைகள் விற்பனை செய்யபட்டன.

* கண்காட்சியின் முதல் நாளன்று மழை பெய்ததால் அரங்கத்தை தயார் செய்வதிலும் பதிப்பாளர்கள் புத்தகங்களை ஸ்டால்களுக்கு கொண்டு வருவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கென்றே உள்ள வலைப்பதிவின் மூலம் அறிந்தேன். அன்று மழையால் துவக்கவிழாவும் நடைபெறவில்லை. சனிக்கிழமை மதியம் 1 மணி அளவில் கண்காட்சிக்குள் நுழைந்தபோது கிட்டத்தட்ட எல்லா ஸ்டால்களும் தயார் நிலையில் இருந்தன. ஒரு சில இடங்களில் தரைவிரிப்பைச் சரிசெய்வது மற்றும் ஸ்டால்களைத் தயார் செய்வது என வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சனிக்கிழமை ஓரளவு நல்ல வெயில். முதல் நாள் மழை பெய்தும் கிட்டத்தட்ட எல்லா ஸ்டால்களும் தயார் நிலையில் இருந்தது பிரம்மிப்படையச் செய்தது. மழையால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க எவ்வளவு முயற்சி எடுத்திருப்பார்கள்! இனி புத்தகக் கண்காட்சி நாள்களில் மழையே பெய்யாமல் இருக்க இயற்கை அருள் புரியட்டும்! அன்று மாலையிலிருந்து நல்ல கூட்டம்.

இந்த முறை புதியவை:

* புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்) மற்றும் யுரேகா புக்ஸ் (யுரேகா கல்வி இயக்கம்) தனி ஸ்டால்களை வைத்துள்ளன. இவை இரண்டிலும் சிறுவர்களுக்கான அருமையான புத்தகங்கள் உள்ளன.

* “உலகத் திருக்குறள் மையம்” ஸ்டாலில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் சம்பந்தமான எல்லாப் பதிப்பகப் புத்தகங்களையும் விற்பனைக்கு வைத்துள்ளாரகள். திருக்குறள் MP3 குறுந்தகடாகக் கிடைக்கிறது.

* தமிழ் மையத்தின் ஸ்டாலில் திருவாசகம், Season of Love, சென்னை சங்கமம் ஆகிய ஒலிக் குறுந்தகடுகள் கிடைக்கின்றன.

* தூர்தர்ஷன் ஸ்டாலில் ஏற்கனவே ஒலிபரப்பப்பட்ட சில சிறந்த நிகழ்ச்சிகள் குறுந்தகட்டில் கிடைக்கின்றன.

புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல இருப்பவர்களுக்குச் சில ஆலோசனைகள்:
* குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்க விரும்புவர்கள் புக்ஸ் ஃபார் சில்ட்ரன்/பாரதி புத்தகாலயம், யுரேகா புக்ஸ், நேஷனல் புக் டிரஸ்ட மற்றும் Prodigy ஸ்டால்களில் அருமையான புத்தகங்களை அள்ளி வரலாம்!

* பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வாங்குவதைத் தவிர்க்க நீங்களே பைகளை எடுத்துச் செல்லுங்கள். கேரி பேக்குகளை வாங்குவதைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மாசுபடாமலிருக்க உதவி செய்தேன் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் ! (நான் 95% ஸ்டால்களில் கேரி பேக்குகளை வாங்கவில்லை !)

* புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது போதிய அளவு ரூ.10, ரூ.20 நோட்டுக்களையும் மற்றும் சில்லரை நாணயங்களையும் எடுத்துச் செல்லுங்கள். பதிப்பகத்தாருக்கு சில்லரை தேட வேண்டிய நேரத்தைக் குறைக்கவும் உங்களுக்கு அடுத்து பில் போடுவதற்காகக் காத்திருப்பவருக்கும் உதவியாகவும் இருக்கும்.

* இரண்டாவது சுற்றில் செல்லும் போது குறிப்பிட்ட பதிப்பகங்களுக்குச் செல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாவது முறை சென்ற போது நேரமின்மையால் சில முக்கியமான பதிப்பகங்களுக்குச் செல்ல இயவில்லை. கூடுமானவரை முதல் சுற்றிலேயே விரும்பிய பதிப்பகத்திற்குச் செல்வது வசதியானதாக இருக்கலாம்.

சில ஏமாற்றங்கள்:

* கண்காட்சி சமயத்தில் வெளிவரும் புதிய புத்தகங்களின் பெயர்களை (புதிய பார்வை மற்றும் புத்தகம் பேசுது இதழ்களிலிருந்து சேகரித்தவை) எழுதிச் சென்று அவற்றை வாங்க முயற்சித்தால், புதிய புத்தகங்கள் அடுத்த சில நாள்களில் வெளிவரவிருப்பதாகச் சொன்னார்கள். கண்காட்சி ஆரம்ப நாளிலிருந்தே புதிய புத்தகங்கள் கிடைத்தால் இன்னும் விற்பனை கூடவாய்ப்பிருக்கும். ஆரம்ப நாள்களில் செல்லும் என் போன்றவர்களும் ஏமாறாமல் இருக்கலாம்!

* இந்த முறையாவது “ஆயிஷா” (திரு இரா.நடராஜன் அவர்கள் எழுதியது) குறும்படத்தை வாங்கி விட வேண்டும் என சில ஸ்டால்களில் விசாரித்ததில் கிடைக்கவில்லை.

* சென்ற வருடம் பாரதி புத்தகாலயம் கண்காட்சிக்கென்றே ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் புத்தகம் பேசுது சிறப்பிதழை வெளியிட்டார்கள். இந்த முறை வெளியிடவில்லை. இந்த மாத புத்தகம் பேசுது இதழ் புத்தகக் கண்காட்சி சிறப்பிதழாக வருகிறது. அதுவும் சனிக்கிழமை வரை கிடைக்கவில்லை.

பபாசி (BAPASI)க்குச் சில வேண்டுகோள்கள்:

கடந்த 6 வருடங்களாக சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வருகிறேன். ஒவ்வொரு வருடத்திலும் கண்காட்சியில் செய்யப் பெறும் நல்ல மாற்றங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

* www.bapasi.org இணையத் தளம் இந்தமுறை நடைபெறும் கண்காட்சிக்கான விபரங்களுடன் புதுப்பிக்கப் பெறவில்லை. கண்காட்சி ஆரம்பிப்பதற்கு முன் தேவையான விபரங்களுடன் இந்த இணையத் தளம் புதுப்பிக்கப் பெற்றால் பயனுள்ளதாக இருக்கும்.

* ஸ்டால்கள் அமைந்துள்ள விதத்தையும், பதிப்பகங்களின் பெயர்களையும் விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கிக் (download) கொள்ள வரைபடத்தை (PDF கோப்பாக A4 பேப்பரில் அச்சுப் பிரதி எடுத்துக்கொள்ள) இந்த இணையத் தளத்தில் கொடுத்தால் உதவியாக இருக்கும். நிச்சயம் கண்காட்சிக்கு வரும் எல்லோருக்கும் இந்த வரைபடம் தேவைப்படாது. இணையத் தொடர்பு இல்லாதவர்களுக்கு இந்த வரைபடத்தை கண்காட்சி தகவல் மையத்திலோ அல்லது நுழைவுச் சீட்டு விற்குமிடத்திலோ குறைந்த விலையில் கிடைக்கும்படிச் செய்யலாம்.

* எல்லா குறும்படங்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அநேகமாக குறும்பட அரங்கிலேயே அனைத்துக் குறும்படங்களும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும்.

* வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்காக பொருள்கள் (சூட்கேஸ்/பைகளை வைக்க) வைப்பறை ஒன்றை ஏற்படுத்துவதைப் பரிசீலிக்கலாம்.

* ஒரே பதிப்பகத்தில் நிறையப் புத்தகங்களை வாங்கினால் அவர்களிடமே கொடுத்துவிட்டு அரங்கிலிருந்து புறப்படும்போது வாங்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், இப்படிச் செய்வது அவர்களுக்குத் தேவையற்ற தொந்தரவாகக் கூட இருக்கலாம். வாங்கிய புத்தகங்களை ஓரிடத்தில் கொடுத்து வைத்து விட்டுப் பிறகு எடுத்துக் கொள்ளும்படி இருந்தால் நன்றாக இருக்கும். பொருள்கள் வைப்பதற்காக உள்ள அறையிலேயே இந்த வசதியையும் ஏற்படுத்தலாம். இந்த இரண்டு சேவைகளையும் கட்டணத்துடன் கொடுக்கலாம்.

————

கண்காட்சியில் தேசிகன், தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி, தமிழ் உபுண்டு (லினக்ஸ்) குழுவை நிர்வகிக்கும் ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு முறை தான் சென்னை வருவதால் நண்பர்களைச் சந்திப்பது, புத்தகக் கண்காட்சி வருவது என எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்யவேண்டி வந்துவிடும். கண்காட்சியில் 7 மணி நேரம் இருந்தும் போதவில்லை! ஒரு நாள் முழுவதும் இருந்தாலும் கூட இரண்டாவது நாளும் தேவைப் படும். ஒரு சில நாள்களில்தான் கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் சிறப்பாகப் பயன்படுத்த முடிகிறது. அந்த மாதிரி நாள்களில் சென்னை புத்தகக் கண்காட்சிக்காக வந்திருந்த நாளும் ஒன்று !

கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான/குறிப்பிடும் படியான புத்தகங்களை அடுத்த பதிவில் தர உள்ளேன்.

Advertisements

Blog at WordPress.com.